.comment-link {margin-left:.6em;}

பரிணாம அறிவியல்

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்

Sunday, August 21, 2005

ஏன் இந்த வலைப்பதிவு?

பொதுவாக உயிர்களின் தோற்றம் குறித்த விளக்கங்களை இருவிதமாக பிரிக்கலாம். ஒன்று: மானுட அறிவுக்கு எட்டமுடியாத ஒரு சக்தியால் அல்லது அறிவால் உயிர்கள் இன்று காணும் அதே வடிவத்தில் உருவாக்கப்பட்டன. மற்றொன்று: உயிர்கள் பரிணாம வளர்ச்சி மூலம் உருமாறுவன. அவை உயிரற்ற பருப்பொருட்களிலிருந்து உருவாகி பின்னர் பல பரிணாம நிலைகளுக்குப் பின்னர் நாம் காணும் இந்நிலையை அடைந்தன. இன்னமும் பரிணாம மாற்றங்களுக்கு உட்பட்டு வருவன என்பதே. முந்தைய நிலைபாடு மத நம்பிக்கையைச் சார்ந்தது. பிந்தையது அறிவு சார் ஊகமாகத் தொடங்கி அறிவியலால் ஆராயப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டு வருவது. முந்தையது மூடியத் தன்மை கொண்ட - புதிய கண்டடைவுகளை உட்கொள்ள இயலாததோர் மனநிலை கொண்டது. பிந்தையது திறந்ததன்மை கொண்டது புதிய கண்டடைவுகளுக்குத் தக்க தம்மை மீள்வடிவமைத்து திருத்திக் கொள்ளும் தன்மை கொண்டது. இவ்விரண்டு நிலைபாடுகளைச் சார்ந்தவர்களும் இந்நிலைபாடுகளின் மேற்கூறிய இரு தன்மைகளையும் எதிரணிகளின் பலவீனமாகவும் தமதணிகளின் பலமாகவும் பேசுவதுண்டு. சில ஆயிரம் ஆண்டுகளாக மானுட நம்பிக்கையில் ஊறிப்போயுள்ள நம்பிக்கைச் சார்ந்த மனதிருப்தி தரும் கற்பனைக்கும், அந்த மனநிம்மதிக்கு சவால்விடும் வகையில் இரண்டரை நூற்றாண்டுகளாக மிகப்பெரிய மனமண்டல மாற்றத்தை நிகழ்த்தியுள்ள அறிவியல் சார்ந்த கண்டடைவுக்குமான போராட்டமே இவ்விரு நிலைபாடுகளிடையே நிகழும் போர் எனில் அது மிகையல்ல. நம்பிக்கைச் சார்ந்த அதிகாரத்தின் மூலம் அளப்பரிய கட்டுப்பாட்டினை மற்றும் இன-பண்பாட்டு மேன்மைவாதங்களை சமுதாயத்தின் மேல் திணிக்க விரும்புவோர்க்கு பரிணாம அறிவியல் பெரும் சவாலாக விளங்குகிறது. எனவே அத்தகையோருக்கு அறிவுத்தளத்தில் அதுவே முதல் எதிரியாக விளங்குவதில் ஆச்சரியமில்லை. பரிணாம அறிவியலின் மீது தொடுக்கப்படும் தாக்குதலும் அதனை பள்ளிகளில் கற்பிப்பதற்கு எதிரான கட்டுப்பாடுகளும் பல நாடுகளில் இன்றும் நீடிக்கின்றன. அத்தகையதோர் இருட்சமுதாயத்தினை நோக்கி இந்நாட்டையும் இந்நாட்டு மக்களையும் இழுத்துச் செல்லும் முயற்சிகள் அதீத பிரச்சார வெறியுடன் நிகழ்த்தப்படுகின்றன. தம்மை 'முற்போக்கு லிபரல் இடதுசாரி' etc. அரசியலுடன் இணைத்து பிரகடனப்படுத்தும் அறிவுஜீவிகள் கூட இந்த பரிணாம எதிர்ப்பு இயக்கத்தவருடன் இணைந்து கோஷிக்கும் அவலநிலை இப்போது உருவாகியுள்ளது. எனினும் இத்தேசத்தின் ஞானமரபின் மைய நீரோட்டம் பரிணாம அறிவியலுக்கு எதிரானதல்ல. இது நம் கலாச்சார வலிமை. இவ்வலிமை மிக்க பாரம்பரியத்திலிருந்து எழும் சிறு குரலாக, இவ்வலைப்பதிவு.

0 Comments:

Post a Comment

<< Home