.comment-link {margin-left:.6em;}

பரிணாம அறிவியல்

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்

Monday, August 22, 2005

யாஹியாவின் படைப்புவாதத்திற்கு பதில்-1

பழம் புவியின் ஆதிப்பெருங்கடலில் கரிம மூலக்கூறிழைகளின் இணைவிலிருந்தே இயற்கை தேர்ச்சி நடைபெறுவதன் மூலம் மென்மேலும் சிக்கலமைப்புகள் உள்ள அமைவுகள் உருவாகி அதிலிருந்து உயிர் என நாம் அழைக்கும் நிகழ்வு வரையிலான பரிணாம பாதை இன்று பல அறிவியலாளர்களாலும் சாத்தியக்கூறுகள் மிகுந்த ஒன்றாகவே அறியப்பட்டு வருகிறது. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸ்ஸிஸ்கோ ரெடியாலும்(1660), பின்னர் லஸாரோ ஸ்பாலென்ஸியாலும் (1768), அதன் பின்னர் தியோடர் ஸ்வானாலும் (1836), இறுதியாகவும் முடிவாகவும் லூயிஸ் பாய்ஸ்ச்சராலும் (1862) உறுதியாக பொய்ப்பிக்கப்பட்டது யாதெனில் அழுக்குகளிலிருந்தும் இன்னபிற உயிரற்ற ஜட வஸ்துக்களிலிருந்தும் பாக்டீரிய கோளங்கள் முதல் பூச்சிகள் வரை உருவாகமுடியுமெனக் கருதப்பட்ட நம்பிக்கை. இது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்ததோர் ஒரு பழமையான கிரேக்க நம்பிக்கைதான். இதற்கும் பரிணாம அறிவியலாளர் முன்வைக்கும், பழம் புவியின் ஆதிப்பெருங்கடலில் உயிர் முகிழ்ப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதையும் இதையும் முடிச்சு போடுவது பரிணாம அறிவியலின் அடிப்படையை அறியாமல் செய்யப்படும் வார்த்தை விளையாட்டுக்கள் அவ்வளவே. இன்னமும் கூறினால் திடீரென உயிரினம் (அதன் அனைத்து சிக்கலான அமைப்புகளுடனோடே) ஜடப்பொருளிலிருந்து தோன்றுகிறது எனும் கருதுகோளை கொண்டவர்கள் அந்நாளில் அதனை இறைவனின் சிருஷ்டி அதிசயமாகக் கண்டவர்கள். உதாரணமாக, அன்று லூயிஸ் பாயிஸ்ச்சரை அதிகமாக எதிர்த்த பாரிஸின் பெலிக்ஸ் பௌவுச்ட்னொரு படைப்புவாத ஆசாமி. அவர் இவ்வித உயிர் உருவாதல் "சிருஷ்டி கர்த்தரின் பெருமைக்கு ஆதாரமாகிறது" என்றார். ஆனால் பரிணாம அறிவியல் எக்கால கட்டத்திலும் ஜடப்பொருளிலிருந்து தீடீரென உயிர் தோற்றம் (Spontaneous Generation or Abiogenesis) எனும் கருதுகோளை ஏற்றதில்லை. ஆதிப்பெருங்கடலில் பலகோடி வருடங்களாக கதிரியக்கமும் கரிம மூலக்கூறிழைகளுமாக, பழம் புவியின் வளிமண்டல இயக்கங்களுமாக படிப்படியாக உருவாக்கிய நிகழ்வொன்றினைக் குறித்து அறிவியல் பேசுவதை, அறிவியலால் பொய்ப்பிக்கப்பட்ட பழம் நம்பிக்கை ஒன்றுடன் இணைத்து பேசுவது அறியாமையின் விளைவாகும். இன்றைக்கு 400 கோடி ஆண்டுகளிலிருந்து 300 கோடி ஆண்டுகளாக இப்புவியில் நடந்த வேதிவினைகளை குறித்து நாம் சுருக்கமாக காணலாம். இப்பூமியின் முதல் ஒரு செல் உயிரிகளின் தோற்றம் ஏறத்தாழ 100 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பது நம் கவனத்தில் இருக்க வேண்டும். கார்பனும், ஆக்ஸிஜனும் நைட்ரஜனும் நேற்று இணைந்து இன்றைக்கு உயிராக - பாக்டீரியமாக அதன் அனைத்து புரதங்களுடன் -மாறிற்று என்பதல்ல பரிணாம அறிவியல். அப்படி நிகழ்ந்திருந்தால் அத்தகையதோர் நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு பெரும் சக்தியின் அறிவு பூர்வ படைப்பாக இருந்திருக்கலாம். மாறாக, அது நூறு கோடி ஆண்டுகளாக சிறு மூலக்கூறுகள், மூலக்கூறிழைகள், அவற்றால் உருவாகும் சங்கிலிகண்ணித் தொடரமைப்புகள், சிறு லிப்பிட் கோளங்கள், அதனால் உருவான உள்-வெளி அமைப்புகள் அதனுள் சிறு மீள்-உருவாக்குத் தன்மை கொண்ட மூலக்கூறுகளுடைய அமைப்புகள், இத்தகைய அமைப்புகளின் பரவல், ஒரு செல் உயிரினங்களின் மூதாதை அமைப்புகள் என ஒரு பல சாத்திய கூறுகளை, நாம் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளாத மர்மங்களை, புரிந்து கொள்ள முயலும் படிக்கப்படாத பக்கங்களை கொண்டது. இவ்வாறு கூறியதும், "பார்த்தீர்களா பரிணாமம் உயிரின் உதயத்தை விளக்க முடியாது என்பதற்கு இதோ இன்னொரு வாக்குமூலம்." என்று சில படைப்புவாதிகள் கூறிவிடக் கூடும். ஆனால் இதற்கு பொருள் அதுவல்ல. உயிரின் உதயம் எனும் மர்மத்தை நாம் விளங்கிக் கொள்ள முயல்கிறோம். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளோம். பொதுவான சித்திரம் தெரிந்து விட்டது. இனி அதன் உள்-வழிகளை நாம் அறிய வேண்டும். அதையும் செய்யும் போதுதான் உயிரின் உதயம் குறித்த நம் சித்திரம் முழுமை பெறும். சற்றேறக்குறைய நூறு கோடி ஆண்டுகள் முற்றிலும் மாறுபட்ட வளிமண்டலம் கவிய இப்புவியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றை பரிசோதனை சாலையில் பரிசோதிப்பதிலும் அறிவியல் முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளது. யூரே மில்லர் (1953) மீத்தேன் அமோனியா நீராவி மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை கொண்ட வளிமண்டலத்தில் அடிக்கடி எழும் மின்சக்தியுடன் கூடியச் சூழலினை தம் பரிசோதனையில் உருவாக்கிய போது கிளைஸின், ஆல்பா-அலனைன், பீட்டா-அலனைன், அஸ்பார்ட்டிக் அமிலம் போன்ற அமினோ அமிலங்கள் தாமாகவே உருவாகின. ஹைட்ரஜன் சயனைடுடன் நீர் அமோனியா எனும் அமைவில் J.ஓரோ நடத்திய பரிசோதனை டி.என்.ஏ மூலக்கூறின் நைட்ரஜன் கார அமைப்பான அடினைனை அளித்தது. நைட்ரஜன் ஐயனிகள், நீர், கரியமில வாயு கார்பன் மோனாக்ஸைட் போன்றவை கொண்ட வளிமண்டலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பார்மால்டிகைட் கிடைத்துள்ளது (ஜே.பி.பிண்டால், 1980). முன்னரே குறிப்பிடப்பட்டவாறு உயிரின் உதயத்தில் லிப்பிட் (Lipid) கோளங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இவை ஆதிமுன்னோடி உயிரணுவின் மூதாதையாக இருந்திருக்க முடியும் என்பது பரிசோதனைச் சாலையில் நிரூபணமான விஷயம்.(லூயிகி லூயிஸி, 1994) வெப்ப இயங்கியல் விதிகளாலும் புறச்சூழல் விசைகளாலும் உந்தப்பட்டு லிப்பிட் கோளங்கள் தானாகவே செல் பிரிவின் முன்னோடிகளாக செயல்பட்டன.

பட விளக்கம்: உயிரற்ற அமைவில் உயிரம்சத்தின் உதயம்
  • 1.லிப்பிட் மூலக்கூறுகளால் உருவான மைஸிலே அமைப்புகள்
  • 2.அதன் மூலம் உருவாகும் நுண்கோளங்கள்
  • 3.இக்கோளங்களின் வளர்ச்சி
  • 4.புறச்சூழல் விசைகளாலும் வெப்ப ௾யங்கியல் தன்மைகளாலும் இக்கோளம் நிலையற்றத் தன்மை அடைகிறது.
  • 5.உயிரணுத் தன்மையான செல்-பிரிதல் போன்ற பிரிதலின் முன்னோடி நிகழ்வு

நன்றி: நேச்சர் : Vol.409:18 ஜனவரி 2001 பக்.389
(பார்க்க மேலேயுள்ள படமும் விளக்கமும்) எனவே உயிரற்றதிலிருந்து உயிர் உள்ளது வராது என்பது உண்மையில் ஜடப்பொருளிலிருந்து ஒரு முழு உயிரினம் திடீரென எழும்பிவிடாது என்பதையே கூறுகிறது. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த உயிரின் உதயத்திற்கான பரிமாணங்களில் இவ்விதி பொருத்தமற்றது.

Sunday, August 21, 2005

வாதம்-1: உயிரற்றதிலிருந்து உயிர் வரமுடியாது எனவே பரிணாமம் தவறானது.
வாதம்: உயிரியலின் அடிப்படை விதி 'உயிரற்ற ஜடத்திலிருந்து உயிர் தோன்ற முடியாது' என்பதாகும். பரிணாமக் கோட்பாடு இதற்கு எதிராக இருப்பது தெளிவு. இஸ்லாமிய பிரச்சார எழுத்தாளர் ஹரூண் யாஹியாவின் வார்த்தைகளில் " This evolutionary claim, however, is contrary to one of the most fundamental rules of biology: Life comes only from life, which means that inanimate matter cannot generate life. The belief that inanimate matter can produce life is actually a medieval superstition. According to this theory, called "spontaneous generation", it was believed that mice sprang naturally from wheat, or maggots arose "spontaneously" from meat. At the time when Darwin put forward his theory, the belief that microbes of their own accord formed themselves from inanimate matter was also very common. The findings of the French biologist Louis Pasteur put an end to this belief. As he put it: "The claim that inanimate matter can originate life is buried in history for good." லூயிஸ் பாஸ்ச்சரால் ஐயந்திரிபற தவறென நிரூபிக்கப்பட்ட 'ஜடப்பொருட்களிலிருந்து உயிரின் உதயம்' (abiogenesis) மற்றும் 'உயிரின் திடீர் உதயம்' (spontaneous generation of life) ஆகியவையே பரிணாமவாதத்தின் அடிப்படையாக உள்ளது. இதுவே பரிணாமவாதம் அறிவியலுக்கு எதிரானது என்பதை நிரூபிக்கிறது. மேலும் ஒரு செல் உயிர் கூட வேண்டாம், ஒரு புரத மூலக்கூறு (அமினோ அமில மூலக்கூறுகள் குறிப்பிட்ட வரிசையில் பெப்டைட் இணைப்புக்கள் மூலம் சங்கிலித் தொடரென உருவாகும் மூலக்கூறு) கூட தற்செயலாக உருவாகுவதற்கான நிகழ்தகவு (probability) மிக மிக அரிதான, நிகழ இயலா ஒன்றென்றே கூறுமளவுக்கு அரிதான ஒன்றாகும். ஹரூண்யாஹியாவின் வார்த்தைகளில், The theory of evolution claims that the first proteins formed "by chance". Probabilistic calculations, however, show that this is by no means possible. For
instance, the probability of the amino acid sequence of a protein made up of 500 amino acids being in the correct order is 1 in 10950. 10950 is an incomprehensible figure formed by placing 950 zeros after 1. In mathematics, a probability smaller than 1 over 1050 is considered to be almost impossible.

ஆக உயிரற்றதிலிருந்து உயிரினம் உருவாகமுடியாது எனும் அடிப்படை உண்மையை பரிணாமம் மறுதலிக்கிறதா?அரிய நிகழ்தகவு கொண்ட நிகழ இயலாத்தன்மைக்கு அருகாமையிலிருக்கும் நிகழ்வுகளை சாத்தியக்கூறுகளென பரிணாமம் காட்டுகிறதா?

ஏன் ஹரூண் யாஹியா?

இங்கு படைப்புவாதிகள் மேடைகளிலும் பிரச்சார நூல்களிலும் பரிணாம அறிவியலுக்கு எதிராக முன்வைக்கும் வாதங்களை குறைந்த பட்சம் வாரத்திற்கொன்றாக எதிர்கொள்ளலாம். இதற்கு உதவியாக நான் எடுத்துக்கொண்ட நூல் ஹரூண்யாஹியா எனும் இஸ்லாமிய பிரச்சாரகருடைய நூலாகும். ஏனெனில் இந்த எழுத்தாளர் திண்ணை இணைய இதழில் இரு முறை இஸ்லாமிய சகோதரர்களால் அறிவியல் பார்வை கொண்ட இஸ்லாமிய அறிஞராக முன்வைக்கப்பட்டுள்ளார்.(ஹரூண் யாஹியாவின் நூல்: Tell me about the Creation, Goodword publishers New Delhi.) தற்போது தமிழகமெங்கும் நடக்கும் இஸ்லாமிய மாநாடுகளிலும், அமைதி/பிற மதத்தவருடனான கருத்தரங்குகளிலும் பரிணாமத்திற்கு மாற்றான குரலாக அதிக எண்ணிக்கையில் விற்கப்படும் நூல் மற்றும் குறுந்தகடுகள் இவருடையதேயாகும். அபு அசியா ஜனூல் ஆப்தீன் போன்றவர்களும் பரிணாமத்தை மேடைகளில் விமர்சிப்பதுண்டு. ஹரூண் யாஹியா போன்றே இஸ்கான் இயக்கத்துடன் தொடர்புடைய மைக்கேல் கிரேமோ என்பவரும் பரிணாம எதிர்ப்பு நூல் ஒன்றினை எழுதியுள்ளார். யாஹியாவிற்கு கூறும் மறுப்புக்கள் கிரேமோவுக்கும் ஸ்ரீலஸ்ரீ பிரபுத்த பாதாவிற்கும் பொருந்தும். அதிர்ஷ்டவசமாக பிரபுத்தபாதாவின்/கிரேமோவின் வார்த்தைகளுக்கு ஹிந்து தர்மத்தின் மற்றைய பிரிவினரே பதிலளித்துவிடுவர்/மறுத்துவிடுவர் என்பதுடன் அவர்களின் பிரச்சார வலிமை தழிழ் கூறும் நல்லுலகில் வகாபியிச படைப்புவாதிகள் அளவு இல்லை. எனவேதான் இன்றைய தேதியில் தமிழ்நாட்டில் வலிமையுடன் நடத்தப்படும் படைப்புவாத பிரச்சாரத்தின் முக்கிய ஆளுமையாக காணப்படும்/இஸ்லாமிய சகோதரர்களாலேயே முன்வைக்கப்படும், ஹரூண் யாஹியா அவர்களது வாதங்கள் இவ்வலைப்பதிவில் எதிர்கொள்ளப்படுகின்றன.

ஏன் இந்த வலைப்பதிவு?

பொதுவாக உயிர்களின் தோற்றம் குறித்த விளக்கங்களை இருவிதமாக பிரிக்கலாம். ஒன்று: மானுட அறிவுக்கு எட்டமுடியாத ஒரு சக்தியால் அல்லது அறிவால் உயிர்கள் இன்று காணும் அதே வடிவத்தில் உருவாக்கப்பட்டன. மற்றொன்று: உயிர்கள் பரிணாம வளர்ச்சி மூலம் உருமாறுவன. அவை உயிரற்ற பருப்பொருட்களிலிருந்து உருவாகி பின்னர் பல பரிணாம நிலைகளுக்குப் பின்னர் நாம் காணும் இந்நிலையை அடைந்தன. இன்னமும் பரிணாம மாற்றங்களுக்கு உட்பட்டு வருவன என்பதே. முந்தைய நிலைபாடு மத நம்பிக்கையைச் சார்ந்தது. பிந்தையது அறிவு சார் ஊகமாகத் தொடங்கி அறிவியலால் ஆராயப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டு வருவது. முந்தையது மூடியத் தன்மை கொண்ட - புதிய கண்டடைவுகளை உட்கொள்ள இயலாததோர் மனநிலை கொண்டது. பிந்தையது திறந்ததன்மை கொண்டது புதிய கண்டடைவுகளுக்குத் தக்க தம்மை மீள்வடிவமைத்து திருத்திக் கொள்ளும் தன்மை கொண்டது. இவ்விரண்டு நிலைபாடுகளைச் சார்ந்தவர்களும் இந்நிலைபாடுகளின் மேற்கூறிய இரு தன்மைகளையும் எதிரணிகளின் பலவீனமாகவும் தமதணிகளின் பலமாகவும் பேசுவதுண்டு. சில ஆயிரம் ஆண்டுகளாக மானுட நம்பிக்கையில் ஊறிப்போயுள்ள நம்பிக்கைச் சார்ந்த மனதிருப்தி தரும் கற்பனைக்கும், அந்த மனநிம்மதிக்கு சவால்விடும் வகையில் இரண்டரை நூற்றாண்டுகளாக மிகப்பெரிய மனமண்டல மாற்றத்தை நிகழ்த்தியுள்ள அறிவியல் சார்ந்த கண்டடைவுக்குமான போராட்டமே இவ்விரு நிலைபாடுகளிடையே நிகழும் போர் எனில் அது மிகையல்ல. நம்பிக்கைச் சார்ந்த அதிகாரத்தின் மூலம் அளப்பரிய கட்டுப்பாட்டினை மற்றும் இன-பண்பாட்டு மேன்மைவாதங்களை சமுதாயத்தின் மேல் திணிக்க விரும்புவோர்க்கு பரிணாம அறிவியல் பெரும் சவாலாக விளங்குகிறது. எனவே அத்தகையோருக்கு அறிவுத்தளத்தில் அதுவே முதல் எதிரியாக விளங்குவதில் ஆச்சரியமில்லை. பரிணாம அறிவியலின் மீது தொடுக்கப்படும் தாக்குதலும் அதனை பள்ளிகளில் கற்பிப்பதற்கு எதிரான கட்டுப்பாடுகளும் பல நாடுகளில் இன்றும் நீடிக்கின்றன. அத்தகையதோர் இருட்சமுதாயத்தினை நோக்கி இந்நாட்டையும் இந்நாட்டு மக்களையும் இழுத்துச் செல்லும் முயற்சிகள் அதீத பிரச்சார வெறியுடன் நிகழ்த்தப்படுகின்றன. தம்மை 'முற்போக்கு லிபரல் இடதுசாரி' etc. அரசியலுடன் இணைத்து பிரகடனப்படுத்தும் அறிவுஜீவிகள் கூட இந்த பரிணாம எதிர்ப்பு இயக்கத்தவருடன் இணைந்து கோஷிக்கும் அவலநிலை இப்போது உருவாகியுள்ளது. எனினும் இத்தேசத்தின் ஞானமரபின் மைய நீரோட்டம் பரிணாம அறிவியலுக்கு எதிரானதல்ல. இது நம் கலாச்சார வலிமை. இவ்வலிமை மிக்க பாரம்பரியத்திலிருந்து எழும் சிறு குரலாக, இவ்வலைப்பதிவு.