.comment-link {margin-left:.6em;}

பரிணாம அறிவியல்

புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்

Monday, August 22, 2005

யாஹியாவின் படைப்புவாதத்திற்கு பதில்-1

பழம் புவியின் ஆதிப்பெருங்கடலில் கரிம மூலக்கூறிழைகளின் இணைவிலிருந்தே இயற்கை தேர்ச்சி நடைபெறுவதன் மூலம் மென்மேலும் சிக்கலமைப்புகள் உள்ள அமைவுகள் உருவாகி அதிலிருந்து உயிர் என நாம் அழைக்கும் நிகழ்வு வரையிலான பரிணாம பாதை இன்று பல அறிவியலாளர்களாலும் சாத்தியக்கூறுகள் மிகுந்த ஒன்றாகவே அறியப்பட்டு வருகிறது. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸ்ஸிஸ்கோ ரெடியாலும்(1660), பின்னர் லஸாரோ ஸ்பாலென்ஸியாலும் (1768), அதன் பின்னர் தியோடர் ஸ்வானாலும் (1836), இறுதியாகவும் முடிவாகவும் லூயிஸ் பாய்ஸ்ச்சராலும் (1862) உறுதியாக பொய்ப்பிக்கப்பட்டது யாதெனில் அழுக்குகளிலிருந்தும் இன்னபிற உயிரற்ற ஜட வஸ்துக்களிலிருந்தும் பாக்டீரிய கோளங்கள் முதல் பூச்சிகள் வரை உருவாகமுடியுமெனக் கருதப்பட்ட நம்பிக்கை. இது பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்ததோர் ஒரு பழமையான கிரேக்க நம்பிக்கைதான். இதற்கும் பரிணாம அறிவியலாளர் முன்வைக்கும், பழம் புவியின் ஆதிப்பெருங்கடலில் உயிர் முகிழ்ப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதையும் இதையும் முடிச்சு போடுவது பரிணாம அறிவியலின் அடிப்படையை அறியாமல் செய்யப்படும் வார்த்தை விளையாட்டுக்கள் அவ்வளவே. இன்னமும் கூறினால் திடீரென உயிரினம் (அதன் அனைத்து சிக்கலான அமைப்புகளுடனோடே) ஜடப்பொருளிலிருந்து தோன்றுகிறது எனும் கருதுகோளை கொண்டவர்கள் அந்நாளில் அதனை இறைவனின் சிருஷ்டி அதிசயமாகக் கண்டவர்கள். உதாரணமாக, அன்று லூயிஸ் பாயிஸ்ச்சரை அதிகமாக எதிர்த்த பாரிஸின் பெலிக்ஸ் பௌவுச்ட்னொரு படைப்புவாத ஆசாமி. அவர் இவ்வித உயிர் உருவாதல் "சிருஷ்டி கர்த்தரின் பெருமைக்கு ஆதாரமாகிறது" என்றார். ஆனால் பரிணாம அறிவியல் எக்கால கட்டத்திலும் ஜடப்பொருளிலிருந்து தீடீரென உயிர் தோற்றம் (Spontaneous Generation or Abiogenesis) எனும் கருதுகோளை ஏற்றதில்லை. ஆதிப்பெருங்கடலில் பலகோடி வருடங்களாக கதிரியக்கமும் கரிம மூலக்கூறிழைகளுமாக, பழம் புவியின் வளிமண்டல இயக்கங்களுமாக படிப்படியாக உருவாக்கிய நிகழ்வொன்றினைக் குறித்து அறிவியல் பேசுவதை, அறிவியலால் பொய்ப்பிக்கப்பட்ட பழம் நம்பிக்கை ஒன்றுடன் இணைத்து பேசுவது அறியாமையின் விளைவாகும். இன்றைக்கு 400 கோடி ஆண்டுகளிலிருந்து 300 கோடி ஆண்டுகளாக இப்புவியில் நடந்த வேதிவினைகளை குறித்து நாம் சுருக்கமாக காணலாம். இப்பூமியின் முதல் ஒரு செல் உயிரிகளின் தோற்றம் ஏறத்தாழ 100 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பது நம் கவனத்தில் இருக்க வேண்டும். கார்பனும், ஆக்ஸிஜனும் நைட்ரஜனும் நேற்று இணைந்து இன்றைக்கு உயிராக - பாக்டீரியமாக அதன் அனைத்து புரதங்களுடன் -மாறிற்று என்பதல்ல பரிணாம அறிவியல். அப்படி நிகழ்ந்திருந்தால் அத்தகையதோர் நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு பெரும் சக்தியின் அறிவு பூர்வ படைப்பாக இருந்திருக்கலாம். மாறாக, அது நூறு கோடி ஆண்டுகளாக சிறு மூலக்கூறுகள், மூலக்கூறிழைகள், அவற்றால் உருவாகும் சங்கிலிகண்ணித் தொடரமைப்புகள், சிறு லிப்பிட் கோளங்கள், அதனால் உருவான உள்-வெளி அமைப்புகள் அதனுள் சிறு மீள்-உருவாக்குத் தன்மை கொண்ட மூலக்கூறுகளுடைய அமைப்புகள், இத்தகைய அமைப்புகளின் பரவல், ஒரு செல் உயிரினங்களின் மூதாதை அமைப்புகள் என ஒரு பல சாத்திய கூறுகளை, நாம் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளாத மர்மங்களை, புரிந்து கொள்ள முயலும் படிக்கப்படாத பக்கங்களை கொண்டது. இவ்வாறு கூறியதும், "பார்த்தீர்களா பரிணாமம் உயிரின் உதயத்தை விளக்க முடியாது என்பதற்கு இதோ இன்னொரு வாக்குமூலம்." என்று சில படைப்புவாதிகள் கூறிவிடக் கூடும். ஆனால் இதற்கு பொருள் அதுவல்ல. உயிரின் உதயம் எனும் மர்மத்தை நாம் விளங்கிக் கொள்ள முயல்கிறோம். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளோம். பொதுவான சித்திரம் தெரிந்து விட்டது. இனி அதன் உள்-வழிகளை நாம் அறிய வேண்டும். அதையும் செய்யும் போதுதான் உயிரின் உதயம் குறித்த நம் சித்திரம் முழுமை பெறும். சற்றேறக்குறைய நூறு கோடி ஆண்டுகள் முற்றிலும் மாறுபட்ட வளிமண்டலம் கவிய இப்புவியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றை பரிசோதனை சாலையில் பரிசோதிப்பதிலும் அறிவியல் முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளது. யூரே மில்லர் (1953) மீத்தேன் அமோனியா நீராவி மற்றும் ஹைட்ரஜன் ஆகியவை கொண்ட வளிமண்டலத்தில் அடிக்கடி எழும் மின்சக்தியுடன் கூடியச் சூழலினை தம் பரிசோதனையில் உருவாக்கிய போது கிளைஸின், ஆல்பா-அலனைன், பீட்டா-அலனைன், அஸ்பார்ட்டிக் அமிலம் போன்ற அமினோ அமிலங்கள் தாமாகவே உருவாகின. ஹைட்ரஜன் சயனைடுடன் நீர் அமோனியா எனும் அமைவில் J.ஓரோ நடத்திய பரிசோதனை டி.என்.ஏ மூலக்கூறின் நைட்ரஜன் கார அமைப்பான அடினைனை அளித்தது. நைட்ரஜன் ஐயனிகள், நீர், கரியமில வாயு கார்பன் மோனாக்ஸைட் போன்றவை கொண்ட வளிமண்டலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பார்மால்டிகைட் கிடைத்துள்ளது (ஜே.பி.பிண்டால், 1980). முன்னரே குறிப்பிடப்பட்டவாறு உயிரின் உதயத்தில் லிப்பிட் (Lipid) கோளங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இவை ஆதிமுன்னோடி உயிரணுவின் மூதாதையாக இருந்திருக்க முடியும் என்பது பரிசோதனைச் சாலையில் நிரூபணமான விஷயம்.(லூயிகி லூயிஸி, 1994) வெப்ப இயங்கியல் விதிகளாலும் புறச்சூழல் விசைகளாலும் உந்தப்பட்டு லிப்பிட் கோளங்கள் தானாகவே செல் பிரிவின் முன்னோடிகளாக செயல்பட்டன.

பட விளக்கம்: உயிரற்ற அமைவில் உயிரம்சத்தின் உதயம்
  • 1.லிப்பிட் மூலக்கூறுகளால் உருவான மைஸிலே அமைப்புகள்
  • 2.அதன் மூலம் உருவாகும் நுண்கோளங்கள்
  • 3.இக்கோளங்களின் வளர்ச்சி
  • 4.புறச்சூழல் விசைகளாலும் வெப்ப ௾யங்கியல் தன்மைகளாலும் இக்கோளம் நிலையற்றத் தன்மை அடைகிறது.
  • 5.உயிரணுத் தன்மையான செல்-பிரிதல் போன்ற பிரிதலின் முன்னோடி நிகழ்வு

நன்றி: நேச்சர் : Vol.409:18 ஜனவரி 2001 பக்.389
(பார்க்க மேலேயுள்ள படமும் விளக்கமும்) எனவே உயிரற்றதிலிருந்து உயிர் உள்ளது வராது என்பது உண்மையில் ஜடப்பொருளிலிருந்து ஒரு முழு உயிரினம் திடீரென எழும்பிவிடாது என்பதையே கூறுகிறது. பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த உயிரின் உதயத்திற்கான பரிமாணங்களில் இவ்விதி பொருத்தமற்றது.

2 Comments:

Blogger தருமி said...

//சிறு மூலக்கூறுகள், மூலக்கூறிழைகள், அவற்றால் உருவாகும் சங்கிலிகண்ணித் தொடரமைப்புகள்..//
இது போன்ற நுட்ப சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை (இனி) அடைப்புக்குறிக்குள் கொடுத்தால் புரிந்துகொள்ள இன்னும் ஏதுவாக இருக்குமே.

10:15 PM  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

கட்டாயமாக தருமி சார். கொஞ்ச நாட்கள் இந்த வலைப்பூவை தொடவில்லை. இதனை செய்யவேண்டும். தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

12:07 AM  

Post a Comment

<< Home